ஒன்று சந்திரமுகி, அடுத்து அதையும் மிஞ்சிய ...தலைப்பைப் பார்த்து குழம்ப வேண்டாம்... இருப்பதிலேயே மிக உயர்ந்தது எதுவோ அதனுடன் தங்களை ஒப்பிட்டுக் கருத்து சொல்வதில் எல்லோருக்குமே ஒரு (அல்ப) திருப்தி.
இதில் இரண்டு அனுகூலங்கள் உள்ளன. ஒன்று கேட்காமலே இலவசமாகக் கிடைக்கும் பப்ளிசிட்டி. இன்னொன்று 'அப்படியும் இருக்குமோ' என்ற சந்தேகத்தில் மக்களில் சிலர் ஏமாந்து போய் ஒருமுறை பார்த்துவிடும் வாய்ப்பு. இதுபற்றி உரியவர்களிடம் விசாரித்த பிறகே இந்த சிறு கட்டுரையை எழுதுகிறோம்.
அயன் என்ற திரைப்படம் சிவாஜி வசூலைத் தொட்டுவிட்டதாக பரபரப்பாக பேட்டிகள் கொடுத்தனர். ஆனால் அடுத்த நாளே விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன் ஒரு ஆடியோ விழாவில் இப்படிச் சொன்னார்:
"தமிழ் சினிமாவில் சாதனை வசூல் என்றால் அண்ணன் சூப்பர் ஸ்டாரின் சமீபத்திய இரண்டு படங்கள்தான். ஒன்று சந்திரமுகி, அடுத்து அதையும் மிஞ்சிய சிவாஜி. அயன் படம் லாபகரமானதுதான். மறுக்கவில்லை. ஆனால் சந்திரமுகி வசூலில் பாதியைக் கூட தொடவில்லை. இதைச் சொல்வதில் எனக்கு தயக்கமில்லை. இதில் சிவாஜி - தி பாஸ் படத்தின் வசூலைத் தொடுவதெங்கே...!" என்றார்.
இந்த நிலையில், தீபாவளிக்கு முன் கந்தசாமி படம் வந்தது. முதல் வார கலெக்ஷனில் சிவாஜியை மிஞ்சிவிட்டதாக அந்தப் படம் தம்பட்டம் அடித்துக் கொண்டது. ஆனால் சிவாஜி என்ற இமயத்தின் வசூலில் கால்வாசியைக் கூட அந்தப் படத்தால் தாண்ட முடியவில்லை என்ற உண்மையை அப்போதே ஒப்புக் கொண்டார் படத்தின் சென்னை நகர விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன்.
அந்தப் படம் 'இத்தனை கோடிகளை வசூலித்தது' என்று தயாரிப்பாளர் தரப்பில் புள்ளி விவரங்கள் தரப்பட்டாலும், அதை விநியோகஸ்தர்கள் உடனுக்குடன் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஆதவன் படத்தின் வசூல் சிவாஜியை மிஞ்சி விட்டதாக ஒரு செய்தியை கசிய விடுகின்றனர். படம் வெளியான ஒரு சில தினங்களில் இந்த வசூல் விவரங்களை வெளியிட்டது காமெடியின் உச்சம். இதுபற்றி கருத்து கேட்டால், சிரித்தபடி நழுவுகிறார் கலைப்புலி ஜி சேகரன்.
சிவாஜி என்ற படத்தின் வசூலை எந்தப் படமும் முறியடிக்கக் கூடாது என்பது நம் விருப்பமல்ல. தாராளமாய் முறியடித்து புதிய சாதனைகள் படைக்கட்டும். தலைவரும் அதைத்தான் விரும்புகிறார்.
ஆனால் அதற்காக பொய்யான தகவல்களை தரவேண்டிய அவசியமென்ன இருக்கிறது!
ரஜினி என்ற இமயத்துடன் ஒப்பீடு செய்துகொள்ள ஆசையா... செய்து கொள்ளுங்கள்... ஆனால் சிறுமைப்படுத்த முயற்சிக்காதீர்கள். அது உங்களுக்கே எதிராகிவிடும்!